எங்கேயோ பார்த்த மயக்கம்

நள்ளிரவு நேரம் அது. உடல் அசதியிலும்
புத்தகத்தின் சில பக்கங்களை படிந்திருந்தபோது ஏற்பட்ட விரக்தியினால் மெல்ல எழுந்து பல நினைவுகளை அசை போட்ட படி கத்தாரின் தொழிற்பேட்டை (இன்டஸ்ட்ரியல் ஏரியா) பகுதியில்  எப்போதும் பரபரப்பாக இயங்கும் பிரதான சாலை ஓரத்தில் ஒன்றில் நடந்துகொண்டிருந்தேன்.
பகல் நேரங்களில் வாடகை வாகன ஓட்டுநர்கள் "தோகா,தோகா,சனயா,சனையா ச்சலோ ச்சலோ" என இந்தி மொழியில் வண்டிக்கு ஆள் பிடிக்கும் அந்த பரபரப்பான சாலையில் இப்போது  என்னை வரவேற்க யாருமில்லாமல்  வெறிச்சோடி இருந்தது . ஒரு வினாடி எனக்குள் நினைத்துக்கொண்டேன் பகல் நேரம் இந்த இடம் எப்படி இருக்கும் ? அல்லது இப்படியா இருக்கும் ?
நிச்சயம் இப்படி இருக்காது .

   நிலவு,காற்று,என எப்போது இரவானாலும் ரசிக்கும் என்னை அன்று எதையும் ரசிக்க விடாத படியான வெளிச்சத்தில் ஒரு அமானுஷ்யத்தை கொண்டு இருந்தது அந்த இரவு .

எனக்கு முன்னேயும், பின்னேயும் சாலை மின்விளக்கு மஞ்சள் நிறம் இனம்புரியாத விரக்திக்கு உரமிட்டது .
நான்  நடந்துக்கொண்டு இருந்தேன்.
 ஆங்காங்கே மின்விளக்குகள் விட்டு விட்டு எரிந்தது .
கைகளில்  ஒரு தண்ணீர் போத்தலும் , இருந்தது. எங்கும் நிசப்தம். தூரத்தில் ஏதோ ஒரு மசுதியில் ஒலிப்பெருக்கியில் (மைக் செட்டில்) இருந்து ஒரு பாடல் அரபு மொழியில் மெல்லியதாய் கேட்டுக்கொண்டு இருந்தது.
அது பாங்கு ஒளி என நினைக்கிறேன் உறுதியாக தெரியவில்லை.




தலையில் கிர்ரென்று ஒரு உணர்வு. இந்த காட்சியை, இந்த சப்தத்தை, இந்த நிகழ்வை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன், அனுபவித்து இருக்கிறேன். கனவிலா? அல்லது நனவிலா? இனம்புரியா ஒரு உணர்வு. ஏற்கனவே பார்த்த சம்பவம் திரும்பவும் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்!  ஒரு நிமிடம் உறைந்து போனேன். உடனே தலையை சிலுப்பினேன். மீண்டும் வேகமாக சிலுப்பினேன்.  என்ன ஆச்சு உனக்கு என்று வியப்போடு கேட்டுக்கொண்டேன்?  ஒன்றும் இல்லை என்றேன் எனக்குள் .

இப்போது எனக்குள் தோன்றியதை யாரிடமாவது சொல்லி விடவேண்டும் போலிருந்தது
அப்படியே சொன்னாலும்  என்ன சொல்லி புரிய வைக்க? அதை நான் மட்டுமே உணரமுடிந்த விஷயம். இது அடிக்கடி நடக்கும் ஒன்று அல்ல அதே போல் ஆபூர்வமான ஒன்றாகவும் இருந்துவிடாது .

இந்த நிகழ்வு ஏற்கனவே எப்போதோ எனக்கு நிகழ்ந்தது போல
அது அப்படியே நேர இடைவெளி இல்லாமல் மீண்டும் எனக்கு நிகழ்வதை போல இருந்தது.

என்ன சொல்லி புரிய வைக்க? அதை நான் மட்டுமே உணரமுடிந்த விஷயம்
இதை ஒரு திரைப்பாடலில் கேட்டிருக்கிறேன்
"தேஜாவு கனவில் தீ மூட்டினாய்" என்று ஆம் அது தேஜாவு தான்
இதை குறித்து ஏதும் கூடுதலாக உங்களுக்கு என்னோடு பேச இருக்கிறதா ?

அமைதியாய் அறை  வந்து சேர்ந்தேன். சலமின்றி உறங்கினேன்.


Comments